என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டலஸ் அழகப்பெரும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில், வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை மூடாவிட்டால் பலாத்காரமாக நாட்டை மூடுவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாகவும் நாட்டை இன்னும் மூடாமல் இருப்பது பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
உலக நாடுகள் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக மூன்று பிரதான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் முதலாவது முழுமையான முடக்கம் ஆகும். சில நாடுகள் மொத்த சனத்தொகையில் 40 – 50 சதவீதம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியை வழங்கியதன் பின்னர் முடக்கத்தை நீக்குகின்றன. ஏனைய நாடுகள் குறிப்பிட்ட சனத்தொகைக்கு தடுப்பூசி வழங்குவதோடு, நாட்டில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.
நாம் தற்போது மூன்றாவது முறைமையையே பின்பற்றுகின்றோம். இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும்..
என்ன நடந்தாலும் நாம் நாட்டை முடக்கப்போவதில்லை என்ற பிடிவாத்தில் அரசாங்கம் இல்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைக்க வேண்டும்.
நாட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூற முடியாது. ஜனாதிபதியும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார் என்றார்.
இரவில் முடக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து பெறாத பலர் உள்ளனர். உயிரிழப்போரில் பலர் தடுப்பூசி பெறாதவர்களாவர்.
தடுப்பூசி தான் ஒரே தீர்வாகும். தேவையான தடுப்பூசி தருவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதன் பின்னர் இந்த பிரச்சினை படிப்படியாக சீராகுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.