நெய்வேலி: என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
“மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி. நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள் விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதனை எதிர்த்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்துக்கு நானே தலைமையேற்கிறேன். இதில் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்” என அன்புமணி ராமதாஸ் நேற்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது என்எல்சி நுழைவாயில் முன்பு தனது தொண்டர்களுடன் நுழைய முற்பட்ட அன்புமணி ராமதாஸ் போலீசார் தடுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு இடைய அன்புமணி ராமதாசை கைது செய்ய வாகனம் வரவழைக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தை கண்ணாடி அடித்து நொறுக்கினர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலீசார் அவர்களை மிரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் அன்புமணி போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். அவரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் அவரை கைது செய்யக்கூடாது என்று வலியுறுத்தி வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலும் பதற்றம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை கலைந்து போக சொன்னபோதும் பாமகவினர் மறுத்து விட்டனர். தொண்டர்கள் சிலர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். பதிலுக்கு பாமகவினரும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் தண்ணீர் பீச்சியடித்து கலைத்தனர்.
தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தை கலைக்க போலீஸார் முயன்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போலீசாருக்கும் பாமகவினருக்கும் பெரும் போராட்டம் நடைபெற்றது. ஒரு வழியாக, பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு, தொண்டர்களிடம் பேசி அமைதி காக்குமாறு வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர். இதன்பின் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்துகு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக என்எல்சி வளாகத்தில் பதற்றம் நிலவியது.