அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரின் அலுவலகத்தில் கையளித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது குறித்து நேற்று(05) பேருவளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலை மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அவரது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார்.
“..குறித்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பற்றிய உண்மை நிலை எனக்குத் தெரியாது. நானும் பத்திரிகைகள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். ஒவ்வொரு பத்திரிகையும் ஏட்டிக்கு போட்டியாக அவரவரது நிலைப்பாடுகளை எழுதியுள்ளனர். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளனர்
கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் சிலர் அதில் கையெழுத்திடவில்லை.. நானும் வாக்களிக்கவில்லை, நான் ஒருபோதும் பாராளுமன்றில் எந்த வாக்கெடுப்பிலும் பங்கேற்பதில்லை என அனைவரும் நன்கு அறிவர்…” எனவும் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அல்லாமல் முழு அரசிற்கும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.