எனக்காகப் பேசி மற்றவர்களின் விடுதலை பாதிக்கக்கூடாது!’ கலங்கிய பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசத்தை அனுபவித்துவருகிறார்கள்.
அவர்களுடைய விடுதலை தொடர்பாக சட்டப்போராட்டம் நடந்து வந்த நிலையில், ‘அவர்களின் விடுதலையை அந்த மாநில அரசே முடிவு செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலையை உறுதிசெய்து 2014-ல் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், ‘‘இதுகுறித்து மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் தெரிவிக்காவிட்டால்… மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும்’’ என்றார்.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஏழு பேரின் விடுதலைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.
இதனால் நளினி, முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை சிக்கலுக்கு உள்ளானது.
நளினி, பேரறிவாளன் விடுதலையை எது தடுக்கிறது?
புகழேந்திஇந்த நிலையில் நளினியை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேரின் சிறை நடவடிக்கைகளும் நன்றாக இருப்பதாக வேலூர் சிறை நிர்வாகம் நற்சான்று வழங்கி, தமிழக அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தது.
ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான சாதகமானச் சூழ்நிலை இருந்தும் அவர்களை விடுதலை செய்யவிடாமல் தடுப்பது எது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான பட்டியலும் தயாராகிவிட்டதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அவரிடம் பேசினோம். “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலைச் செய்யக்கோரி பா.ம.க மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துவருகின்றன. 14 வருடங்கள் முடிந்த கைதிகளின் பட்டியல் எடுத்தாகிவிட்டது.
இந்தப் பட்டியல் அடிப்படையில், குடியரசு தின விழாவில் 648 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. கைதிகளின் உறவினர்களும் சிறைவளாகத்தில் குழுமியிருந்தனர். ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
‘ஒரு வாரம் கழித்தோ அல்லது ஜெயலலிதாவின் பிறந்த நாளிலோ விடுவிக்கப்படலாம்’ என்று சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியலில், முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலைக் வழக்கு கைதிகள் வரவில்லை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ராதாகிருஷ்ணன்கைதிகளும், அந்தப் பட்டியலில் இல்லை.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்றுவரும் இந்த ஏழு பேருக்கும் விடுதலை செய்வதற்கு சாதகமான சூழ்நிலை இருந்தும் விடுவிக்கப்படாமல் இருக்கிறார்கள்” என்றார்.
நளினி விடுதலை ஆக வாய்ப்பு?
இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “நளினி விடுதலையாவதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நளினியை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளோம்.20 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்தவர்கள் சிறையில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை தமிழகத்தில் அமலில் உள்ளது. நளினி 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
எனவே, அந்த விதிமுறையின் கீழ் விடுதலைக்கோரி அரசுக்கு மனுக் கொடுத்திருந்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள். அதனைத் தொடர்ந்துதான் மேல்முறையீடு செய்திருந்தோம். வரும் பிப்ரவரி 3-ம் தேதி நூட்டி ராம மோகன ராவ், சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பென்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது. நளினியை விடுதலை செய்வதற்கான தேவையான வாதங்கள் நம்மிடம் உள்ளன.
சி.பி.ஜ விசாரணை செய்து தண்டிக்கப்பட்ட கைதியாக இருந்தால்கூட இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி அவர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. அதனால் தமிழக அரசு 161-ன் பிரிவைப் பயன்படுத்தக் கோருகிறோம். இதுவரை, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில் தரவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதுதான் விடுதலை செய்வது இயலாது. அதனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் பிரிவைப் பயன்படுத்துங்கள் என்று கூற உள்ளோம். 161-ஐப் பயன்படுத்தி விடுதலை செய்வதற்கு வழிவகை இருந்தும் ஏன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பயன்படுத்தினார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது’’ என்றார்.
‘‘மற்ற கைதிகள் விடுதலையானால் போதும்!’’
இதுகுறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ‘‘கடந்த 25-ம் தேதி தமிழக முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினேன்.அப்போது அவர், ‘விடுதலை செய்வதற்கான வழிமுறைகளைச் செய்கிறோம்’ என்று சொன்னார். முதலமைச்சரைச் சந்திப்பதற்கு முன் 24-ம் தேதி வேலூர் சிறையில் அறிவை (பேரறிவாளன்) சந்தித்துப் பேசினேன். அப்போது அவன், ‘பல ஆண்டுகளாகக் கைதிகள் பலரும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
மனரீதியாக இங்குள்ள கைதிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.அவர்கள், விடுதலையாகிக் குடும்பத்தோடு கொஞ்ச நாட்களாவது சந்தோஷமாக இருக்கட்டும்.
என்னுடைய விடுதலையைப் பேசப்போய் அவர்களுடைய விடுதலைக்குப் பிரச்னை வந்துவிடக் கூடாது’ என்றான் கவலையோடு. அவன் விடுதலை தொடர்பாக என்ன செய்யலாம் என்று பேசப் போனேன். அவனோ, மற்றவர்களின் விடுதலையைப் பற்றிக் கவலைகொள்கிறான். இப்படிப்பட்ட பிள்ளையின் வாழ்க்கை, சிறையிலேயே கழிந்துவிடுமோ என்று வேதனை அடைகிறேன்’’ என்றார் கண்ணீருடன்.
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்… ஆனால், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டவியல் தத்துவம்’. அதை, காப்பாற்றுங்கள் நீதியரசர்களே!