உருமாற்றம் பெற்ற டெல்டா வகையினதான கொரோனா வைரஸ்களின் ஆதிக்கம் எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது….
‘உலகம் முழுவதும் 96 நாடுகளில் உருமாற்றம் பெற்ற டெல்டா வகையினதான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய டெல்டா வகையினதான வைரஸின் பரவல் காணப்படும் நாடுகளில் இந்த வகை கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது அதிகரித்து வருவதும், தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவதும் அதிகரித்திருக்கிறது. இந்த வகையான வைரஸ், அதிதீவிர வைரஸாக உருமாறி வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலேயே டெல்டா வகையினதான கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவும் அபாயம் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடையே இது அதிகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக தடுப்பூசியினை மக்கள் பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளிக்குள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும்’ என அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
தொகுப்பு அனுஷா