ரஷ்யாவில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள, அலெக்ஸி நாவல்னி அலுவலக அறையை, ரம்பத்தை பயன்படுத்தி உடைத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், அவரது ஆதரவாளர்கள் பலரை கைது செய்துள்ளனர்.
அரசுக்கு எதிராக பேரணி நடத்திய, அலெக்ஸியும் கைது செய்யப்பட்டார்.
ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், மார்ச், 18ல் நடக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
சமீப காலமாக, ரஷ்யாவில் மக்கள் மத்தியில் எழுச்சியூட்டும் தலைவராக, அலெக்ஸி நாவல்னி, 41, உருவெடுத்து வருகிறார். நாடு முழுவதும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்றும், மக்களுக்கு, அலெக்ஸி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள அலெக்ஸியின் அலுவலகத்துக்கு சென்ற போலீசார், ரம்பத்தை பயன்படுத்தி, அலுவலக அறையை உடைத்து உள்ளே சென்றனர்.
அலெக்ஸியின் ஊழல் எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த பல ஊழியர்களையும், ஆதரவாளர்களையும், போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே, அரசை கண்டித்து, மாஸ்கோவில் பேரணி நடத்திய அலெக்ஸியும் கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள், ‘ஆட்சியாளர்கள் திருடர்கள்’ என, கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசுக்கு எதிராக, கிழக்கு ரஷ்யாவிலும், சைபீரியாவிலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.