எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில குறிவைத்துள்ளனர். எதிர் கட்சிதலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என இந்தியாவில் 6 நபர்களின் ஐ – ஃபோனை மற்றும் மின்னஞ்சல்களை ஹேக் முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இதன்படி சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை இன்று ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.
அந்த குருஞ்செய்தியில் அரசின் உதவியோடு செயல்படும் ஹேக்கர்கள் சிலர் தங்களது மொபைல் போனை ஹேக் செய்ய முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொபைல் போன்களை ஹெக் செய்ய முயற்சித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது..
‘எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் ஆப்பிள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்னுடைய அலுவலகத்திலும் சிலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளார் கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் பவன் கெரா ஆகியோருக்கும் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பாஜக இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.
நாங்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு இதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை. வேண்டுமென்றால் என் போனைத் தருகிறேன். எதிர்க்கட்சி தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்பது குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை’ எனக் கூறி
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வந்த மின்னஞ்சல் நகல்களை செய்தியாளர்களிடம் காட்டினார்.