எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ” அரசு பணத்தில் விழா நடத்தி எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் அரசியல் அநாகரிகத்தை புகுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று தூர்வாரும் பணியில் திமுக அரசியல் செய்வதாக திருவாய் மலர்ந்திருக்கிறார். திமுக ஆட்சியில்தான் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டன என்பதை மறைத்து, குடிமராமத்துப் பணிகளை ஏதோ இவருடைய கண்டுபிடிப்பு போல் பேசியிருப்பது வியப்பளிக்கிறது.
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நீர்பாசனத்திற்கு பேருதவி செய்யும் வகையில், காவிரி கழிமுக பகுதியை 100 கோடி ரூபாய் மதிப்பில் முதன் முதலில் தூர்வாரியது திமுக அரசு என்பதை மறந்து விட்டு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி, 7,523 கிலோமீட்டர் வரை ஆறுகளையும், வாய்க்கால்களையும் தூர்வாரி, கண்மாய்கள், ஜமீன் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் என்று எண்ணற்ற நீர் நிலைகளில் தூர்வாரும் முத்தான திட்டங்களை நிறைவேற்றி, மாநிலத்தின் நீராதாரங்களைப் பாதுகாத்தது தலைவர் கருணாநிதியின் ஆட்சி என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே, பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகளிடமே அவர் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
ஆளுங்கட்சியாக இருந்தபோது மேற்கொண்ட தூர்வாரும் பணிகளை இப்போது திமுக எதிர்க் கட்சியாகவும் தொடர்கிறது. அப்படித்தான் கோதண்டராமர் கோயில் குளம் தூர் வாரப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை தூர் வார திமுகவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி வருகிறார் முதல்வர் பழனிசாமி.
மக்களுக்கு பயன்படும், விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்கு தேவைப்படும் திமுகவின் தூர் வாரும் பணிகளை ஒரு முதல்வராக இருப்பவர் பாராட்டலாம். அதற்கு மனம் இல்லாவிட்டால் அமைதி காக்கலாம். ஆனால் திமுகவின் தூர்வாரும் பணிகளை தடுக்கும் செயலை எடப்பாடி தொகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் செய்து கொண்டிருக்கும் ஒருவரை முதல்வராகப் பெற்றது தமிழகத்திற்கு நேர்ந்த மாபெரும் விபத்து.
சேலத்தில் உள்ள கச்சராயன் ஏரியில் முதலில் தூர்வாரியது திமுகதான். அந்தப் பணிகள் நடக்கும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்? அந்த ஏரியை நான் பார்வையிடச் செல்கிறேன் என்றதும் என்னைக் கைது செய்தது ஏன்? சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முதல்வரே காரணமாக இருந்தது ஏன்? திமுகவின் தூர்வாரும் பணியை தடுத்து அரசியல் செய்யும் முதல்வர், திமுக அரசியல் செய்கிறது என்று வாய்க்கு வந்தபடி அரசு விழாவில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
தூர்வாரும் பணிகளில் வண்டல் மண், சவுடு மண் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்கிறார். யார் யாருக்கு கொடுக்கப்பட்டது? அந்த மணலை அள்ளிச் சென்றவர்களில் அதிமுகவினர் எத்தனை பேர்? 100 கோடி ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதாக சொல்லும் முதல்வர், அந்தப் பணிகள் அதிமுகவினருக்கு வழங்கப்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா? அப்படியும் இல்லையென்றால் இதுவரை நடைபெற்ற குடிமரமாத்துப் பணிகள் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா?
திமுக என்றைக்கும் சட்டத்தை மதிக்கும் இயக்கம். அதனால்தான் தூர்வாரும் பணிகளுக்கு முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோருகிறோம். ஆனால், சட்டவிரோதமாக ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 89 கோடி ரூபாயை விநியோகித்தவர் எடப்பாடி பழனிசாமி. தடை செய்த குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்து, அதற்கு 40 கோடி லஞ்சம் பெற்றார்கள் என்று புகாருக்கு உள்ளான அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.
ஏன், புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிக்கு ஆவணங்களைக் காணாமல் அடித்துவிட்டு, டிஜிபி பதவி உயர்வு அளித்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வருமான வரித்துறை அதிகாரிகளையே பணிசெய்ய விடாமல் தடுத்த அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்காமல் சட்டத்தை முடக்கி வைத்திருப்பதும் இதே முதல்வர் தான்.
ஒரே மாதத்தில் 5.16 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரை சட்டத்தை மீறி பாதுகாத்துக் கொண்டிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எல்லாவற்றையும் விட குதிரை பேரம் மூலம் சட்டவிரோதமாக மெஜாரிட்டியை நிரூபித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை.
‘விவசாயிகள் வாழ்க்கையில் திமுக அரசியல் செய்கிறது’ என்று மனச்சாட்சியை அடகுவைத்து விட்டுப்பேசுகிறார் முதல்வர் பழனிசாமி. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அதைக் கொச்சைப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்த ஆட்சி எது? விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்றது எந்த ஆட்சி?
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குப் பிரதமரை சந்திக்க நேரம்கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் இருக்கும் ஆட்சி எந்த ஆட்சி? எல்லாம் எடப்பாடி பழனிசாமி நடத்தும் அதிமுக ஆட்சிதான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதாக இன்னொரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். இது இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். அதிமுக என்ற குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது எனக்கு மட்டுமல்ல, அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே தெரியும்.
திமுகவைப் பொறுத்தமட்டில் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இயக்கம். ஆகவே, ஜனநாயக நீரோட்டத்தில் அமோக வெற்றியை பெறப்போகும் திமுகவுக்கு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சட்டவிரோத, ஜனநாயவிரோத இந்த அரசின் அராஜகத்திற்கும், தொடரும் ஊழல் பேரணிக்கும், நிர்வாகத்தை சீரழித்து, தமிழகத்தின் வளர்ச்சியை சுமார் இருபது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்ட கொடுமைக்கும் காரணமான எடப்பாடி பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டு வர, திமுக என்றும் தயங்காது. அதற்கான ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுகவை மிரட்டி விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி போன்றோர் பகல் கனவு காண வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.