எச் 4 விசா வைத்துள்ளவர்கள், வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதற்கு, அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவில், ‘எச் -1பி விசா’வில் வேலை செய்து வருவோரின் கணவன் அல்லது மனைவி, சட்டப்பூர்வமாக அங்கு பணியாற்ற அளிக்கப்படும் அனுமதியை முழுவதும் நிறுத்திக் கொள்ள, அதிபர், டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த முடிவு காரணமாக ஏராளமான பெண்கள் உள்ளிட்ட இந்திய தூதரக அதிகாரிகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கு பாதிப்பு
இது தொடர்பாக, எப்டபிள்யுடி. யுஸ் என்ற ஐடி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்க நிறுவனத்திலிருந்து ஆயிரகணக்கானவர்களை பணியில் இருந்து அகற்றுவது என்பது அவர்களின் குடும்பத்தை சீர்குழைக்கும். இதனால் நமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். எச்4 விசா வைத்திருப்பவர்கள் தங்களின் கணவன் அல்லது மனைவிக்கு நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் வரை காத்திருக்காமல் வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதம்
கலிபோர்னியாவை சேர்ந்த 15 எம்.பி.,ககள் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநருக்கு எழுதிய கடிதம்: அரசின் முடிவால், அமெரிக்கர்களுக்கு பயனளிக்கும் வகையில், உயர்கல்வி கற்றவர்கள் இங்கு முதலீடு செய்ய முடியாது. இந்த விசா வைத்துள்ள தொழிலாளர்களுக்காக அமெரிக்கா அதிக முதலீடு செய்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக, திறமையானவர்களை இங்கிருந்து அனுப்பிவிட்டு, அவர்களின் நாட்டில் தங்களது திறமைகள் மற்றும் அனுபவத்தை பயன்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். இந்த கடிதத்தில் அன்னா ஈஷோ மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
முன்னிலை
எச் 4 விசா வைத்திருப்பவரும் லீவர் போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான மரியா நாவஸ் கூறுகையில், எச் 4 விசா வைத்திருப்பவர்களின் வேலையை பறிப்பது என்ற முடிவு, நாட்டை பாதிப்பதுடன், அமெரிக்க குடும்பத்தினருக்கு எதிர்மறையான பிரச்னைகள் ஏற்படும். சட்டப்படி இங்கு குடியேறியவர்களை பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.