ஆப்ரிக்க நாடான எகிப்தில், மார்ச் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர், பட்டா அல் – சிசி, மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்து முன்னாள் ராணுவ தளபதியான, பட்டா அல் – சிசி, 2014ல், நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில், 96.9 சதவீத ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், எகிப்தில், மார்ச், 26 – 28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடக்கிறது.
இத்தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாத நிலையை, பட்டா உருவாக்கினார். அதனால், எதிர்க்கட்சிகளை சேர்ந்தோர், தேர்தலை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், எகிப்து லிபரல் காட் கட்சி தலைவர், முஸ்தபா முஸ்ஸா, கடைசி நேரத்தில், அதிபர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இருப்பினும், எகிப்தில் எங்கு பார்த்தாலும், பட்டாவை ஆதரிக்கும்படி கோரும் போஸ்டர்களே காண முடிகிறது.
இதனால், அதிபர் தேர்தலில், மீண்டும், பட்டா அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2013ல், ராணுவ தளபதியாக இருந்த பட்டா, அப்போதைய அதிபர், முகம்மது மோர்சிக்கு எதிராக கலகம் செய்து, ஆட்சியை கவிழ்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.