இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய ஊழி திரைப்படத்திற்கு இலங்கை அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருப்பதாக அப் படத்தின் வசன கர்த்தாவும் பாடலாசிரியருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஈழ நிலத்தில் உருவாக்கப்பட்ட ஊழி திரைப்படத்தை எம் நிலத்தில் வெளியிட ஸ்ரீலங்கா அரசின் தணிக்கை சான்றிதழுக்கு காத்திருப்பதாகவும் மே 8 தணிக்கை சான்றிதழ் பற்றிய செய்தி கிடைக்கும், மே 10 ஊழி இலங்கையிலும் வெளியாகும் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை தீவில் படைப்பு சுதந்திரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஊழி தணிக்கை சான்றிதழும் வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சினம்கொள் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ஊழி. 2009ஆம் ஆண்டுக்குப் பிந்தை ஈழத்தில் இருண்ட காலத்தை பேசும் திரைப்படமாக ஊழி அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
தென்னிந்திய கலைஞர்களுடன், சிங்கள கலைஞர்களும் இணைந்து பணியாற்றியுள்ள இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன.