ஸ்ரீலங்கன் விமான சேவையிலும் மிஹின் எயார் விமான சேவையிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கான புதிய ஜனாதிபதி ஆணைக்குழு இன்றிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
நேற்று (02) பிற்பகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாரிய ஊழல், மோசடிகளை மேற்கொண்டவர்கள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியவரும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தவறிழைத்த எவரும் தப்பமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
தான் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருவது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஊழல் நிறைந்த அரசியல் போக்கை மாற்றி புதிய அரசியல் பயணத்திற்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என்றும் கூறினார்.
ஊழல், மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழுக்களை அமைத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் முறைமை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவது பண்டாரநாயக்கவின் ஆட்சியின் பின்னராகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஊழல் மோசடிக்கெதிராக பண்டாரநாயக்க அவர்களின் கொள்கையுடன் அப்பொறுப்புகளுக்காக தான் இன்று அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் ஊழல் நிறைந்த அமைச்சர்கள் இருந்தபோதும் அவர்களுக்கெதிராக அப்போதைய தலைவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சிறய மனிதர்களின் வேதனைகளை நன்கு புரிந்துகொண்டுள்ள தலைவர் என்ற வகையிலும், அவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாரானவன் என்ற வகையிலும் இன்று இந்த பொறுப்புக்களை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுவது கள்வர்களுக்கும் மக்களின் பணத்தை திருடுகின்ற அனைவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட திட்டங்களை ஆக்கியதன் பின்னரேயாகும் என்றும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகம் பற்றிக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்று இக்கருத்திட்டத்தின் காரணமாக கொழும்பு நகரம் ஆபத்துக்குள்ளாகயிருப்பதாக நிபுணர்கள் தர்க்க ரீதியாக சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் தலைவர்கள் இக்கருத்திட்டத்திற்கு கைச்சாத்திடுவதற்கு முன்னர் உரிய சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளாததே இதற்கு காரணமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து முன்னேறிச்செல்வதுடன் மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொறுப்பளித்திருந்த நாட்டின் பொருளாதார முகாமைத்துவப் பொறுப்பை தான் பொறுப்பேற்று தேவையான தீர்வுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுத் தருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசியக் கைத்தொழில் மற்றும் தேசிய விவசாயத்தை பாதுகாக்கின்ற நிகழ்ச்சித் திட்டங்களையும் உடனடியாக ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் குருணாகலை மாவட்ட மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் ஹெட்டிபொலவில் இன்று இடம்பெற்றது.
பண்டுவஸ்நுவர தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, டி.பீ.ஏகநாயக்க, ஏ.எச்.எம்.பௌசி, திலங்க சுமதிபால, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.