தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கடந்த 10-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதன் பிறகும் கொரோனா பரவுவது அதிகரித்துக்கொண்டே சென்றதால் கடந்த 15-ந்தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இதன் பிறகும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்ததால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
கடந்த 24-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்து இருந்தது.
இந்த முழு ஊரடங்கின் காரணமாக தற்போது சென்னையில் கொரோனா தொற்று பரவுவது சற்று குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 7 ஆயிரம் பேருக்கு பரவிய நிலையில் தற்போது 3,500 என்ற நிலையில் கொரோனா பரவல் உள்ளது.
ஆனால் கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருப்பூர், திருச்சி, விருதுநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதித்த நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இதில் அரசு மருத்துவமனையில் 278 பேரும், தனியார் மருத்துவமனையில் 197 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 29 ஆயிரத்து 817 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் உள்ளனர்.
முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் வெளி மாவட்டங்களில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ஒரு வாரம் முழு ஊரடங்கை செயல்படுத்த முடிவு செய்து இருந்தோம். தேவைப்பட்டால் 2-வது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏற்கனவே முடிவு எடுத்து இருந்தோம்” என்று கூறியிருந்தார்.
அதன்படி வருகிற 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்ய இன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுத்துறை, வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா சங்கிலி தொடரை தடுக்க மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்க செய்யலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்தனர்.
கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அரசு தரப்பில் விரிவாக அறிக்கை வெளியிப்படப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.