ஊடகவியலாளர்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டுவிட்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது.
இந்நிலையில், மேற்படி கணக்குகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என டுவிட்டர் நிறுவன உரிமையாளர் இலோன் மஸ்க் நேற்று அறிவித்துள்ளார்.
தனது குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இலோன் மஸ்க் குற்றம் சுமத்தியதையடுத்து ஊடகவியலார்கள் சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
நியூ யோர்க் டைம்ஸ், சிஎன்என், வொஷிங்டன் போஸ்ட் முதலான ஊடகங்களைச் சேர்ந்த ஒரு டசினுக்கும் அதிகமான ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டிருந்தன.
இலோன் மஸ்க்கின் பிரத்தியேக ஜெட் விமானத்தின் பயணங்களைப் பின் தொடர்ந்த @ElonJet எனும் டுவிட்டர் கணக்கை கடந்த புதன்கிழமை இலோன் மஸ்க் முடக்கியதையடுத்து சர்ச்சை ஆரம்பமாகியது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தனது பிள்ளைகளில் ஒருவரை ஏற்றிச் சென்ற கார் ஒன்றை ஒருவர் பின் தொடர்ந்த சம்பவத்தையடுத்து இம்முடக்கம் அவசியமாக உள்ளது என இலோன் மஸ்க் கூறினார். இக்கார் சம்பவத்துக்கு தனது விமானம் பின்தொடரப்படும் விடயத்தை இலோன் மஸ்க் குறைகூறுவதாக கருதப்பட்டது.
இது குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் சிலர், @ElonJet கணக்குடன் தொடர்புயை டுவிட்களையும் இணைத்திருந்தனர். இவ்வாறு நிகழ்நேர இருப்பிடம் குறித்த இத்தகவல்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய உதவக்கூடிய தகவல்கள் என இலோன் மஸ்க் விமர்சித்தார்.
அதன்பின் டுவிட்டரில் நேரடி உரையாடலொன்றை நடத்திய மஸ்க், ‘அனைவரும் சமமாக கையாளப்படுவார்கள். ஊடகவியலாளர்கள் என்பதற்காக அவர்கள் விசேடமானவர்கள் அல்லர்’ எனத் தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளர்களின் கணக்குகளை முடக்கியமைக்கு ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனம் தெரிவித்தன. ஐரோப்பியத்தின் ஆணையாளர் வேர ஜோரோ இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ஐரோப்பிய சட்டங்களின்படி டுவிட்டருக்கு கடும் அபராதங்கள் விதிக்கப்படலாம் என எச்சரித்திருந்தார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கருத்துத் தெரிக்கையில், உலகெங்கும் ஊடகவியலாளர்கள் தணிக்கைகள், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில், இது ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்படி கணக்குகளை இப்போது செயற்பட வைப்பதா அல்லது ஒரு வாரத்தின் பின் செயற்பட வைப்பதாக என்பது குறித்து டுவிட்டரில் இலோன் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார். 3.69 மில்லியன் பேர் இதில் பங்குபற்றினர். அவர்களில் சுமார் 59 சதவீதமானோர் அக்கணக்குகளை உடனடியாக செயற்பட வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
அதன்பின் தனது இருப்பிடம் குறித்த அந்தரங்க தகவல்களை வழங்கியவர்களின் கணக்குகள் மீதான முடக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக இலோன் மஸ்க் நேற்று அறிவித்தார்.