சங்க சபைகளின் தீர்மானங்களை வெளியிடும் போது மகாநாயக்கர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லையெனவும், சங்க சபைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்களே எனவும் சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின் பிரதான பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துக் குறித்து வினவிய போதே தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
மல்வத்து பீட மகாநாயக்கர் நாட்டில் இல்லையென்பது உண்மைதான். இருப்பினும் சங்க சபைகளின் தலைவர் மகாநாயக்கர்கள் தான். சங்க சபையின் தீர்மானத்துக்கு அவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதில் தவறில்லை. மகாநாயக்கர்களின் அனுமதியுடனேயே நாம் கலந்துரையாடல்களை நடாத்துகின்றோம்.
ஜனாதிபதி ஏற்கனவே மகாநாயக்கர்களுடன் கலந்துரையாடிய போது புதிய அரசியல் யாப்பு தொடர்பான அறிக்கைகள் எதுவும் வெளியாகியிருக்க வில்லை. அண்மையில் வெளியாகிய அறிக்கை தொடர்பிலேயே சங்க சபை கூடி கலந்தாலோசித்தது. இந்த ஆலோசனையையும் நாம் தீர்மானமாக வெளியிடவில்லை. ஊடகங்கள் கேட்டதனால் நாம் கலந்தாலோசித்தவற்றை கூறினோம். மகாநாயக்கரின் புகைப்படத்தைப் போட்டது ஊடகங்கள்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மகா சங்கத்தின் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை விரைவில் அழைத்து பேசவுள்ளோம் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவித்ததாக அவரது புகைப்படத்துடன் வெளியான செய்தி தவறானது எனவும், மக்களைப் பிழையாக வழிநடத்தும் நடவடிக்கை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) ஊடகங்களை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
மல்வத்து பீட மகாநாயக்கர் நாட்டில் இல்லாதபோது அவர் தெரிவித்ததாக அவரது புகைப்படத்துடன் நேற்றைய பெரும்பாலான பத்திரிகைகள் முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்தே பிரதமர் ஊடகங்களைச் சாடியிருந்தார்.