உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றைய தினத்திலிருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும்.
குறித்த சட்ட மூலத்தில் 3 மாதங்களுக்குள் வேட்புமனுவைக் கோருவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு எவ்வித தடைகளும் கிடையாது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் நாளிலிருந்து 52 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு.
அதற்கான ஆகக் குறைந்த கால அவகாசம் 52 நாட்கள் என்பதோடு, ஆகக் கூடிய கால அவகாசம் 66 நாட்களாகும். அதற்கமைய ஏப்ரல் இறுதி வாரத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
எவ்வாறிருப்பினும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள், தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளடவை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய கடப்பாடும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.
பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்படு தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
அதேபோன்று இவ்விடயத்தில் அரசியல் கட்சிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
இளைஞர் மற்றும் பெண்களுக்கான கோட்டா தொடர்பில் வேட்புமனுவின் போது கட்சிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்.
இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள் தேர்தல் செலவு வரையறைகளுக்குட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இவை தொடர்பில் வழமை போன்று நாம் கண்காணிப்புக்களை முன்னெடுப்போம் என்றார்.