உலக ஹாக்கி லீக் தொடர் அரையிறுதியின் பி பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.
லண்டனில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்டான ஹர்மன்ப்ரீத் சிங் (13 மற்றும் 33ஆவது நிமிடம்), முன்கள வீரர்களான டல்வீந்தர் சிங் (21 மற்றும் 24ஆவது நிமிடம்) மற்றும் ஆகாஷ் சிங் (47 மற்றும் 53ஆவது நிமிடம்) ஆகியோர் தலா இரண்டு கோல்களும், பிரதீப் மோர் ஒரு கோலும் அடிக்க இந்திய அணி 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இதன் மூலம் உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. உலக ஹாக்கி லீக் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முந்தைய லீக் போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது.
இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஹாக்கி லீக்கில் பெற்ற வெற்றி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.