உலக வங்கியானது கடன்வழங்கல் அடிப்படையில் இலங்கைக்கு உதவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. உரியவாறான நுண்பாகப்பொருளாதாரக் கொள்கைச்செயற்திட்டமொன்று உருவாக்கப்படும் வரையில் இலங்கைக்கு புதிய நிதியுதவிகளை வழங்குவதற்குத் தாம் திட்டமிடவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான நிர்வாகி சியோ காந்தாவிற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ‘அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 டொலர்களை இலங்கைக்கு வழங்கும்’ என்று உலக வங்கியின் பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடாட்-சேர்வோஸ் அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கின்றார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
உலக வங்கியானது கடன்வழங்கல் அடிப்படையில் இலங்கைக்கு உதவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. நாம் இலங்கை மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் விரிவான வளர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்வதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏனைய அனைத்துத்தரப்பினருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றிவருகின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் நாம் ஏற்கனவே இலங்கைக்கு வேறு திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்த நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு உதவுதல், வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு தற்காலிய நிதியுதவியை வழங்குதல், சிறுவர்களுக்கு பாடசாலையில் உணவு வழங்கல் மற்றும் விவசாயிகளுக்கும் சிறியளவிலான வணிகங்களுக்கும் உதவுதல் ஆகியவற்றுக்காக மீள் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.