உலக மசாலா: அபூர்வ மகள்!
பென்னி பேட்டர்சன் 1971-ம் ஆண்டு கோகோ கொரில்லாவைச் சந்தித்தார். பிறந்து சில மாதங்களே ஆன அந்தக் கொரில்லா குட்டியின் தாய் மோசமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் குட்டியைத் தனியாக வளர்க்க வேண்டிய சூழல். பென்னி கோகோ கொரில்லாவைத் தத்தெடுத்துக்கொண்டார். 44 வயது கோகோ இன்று உலகிலேயே பேசக்கூடிய பிரபலமான கொரில்லாவாக மாறியிருக்கிறது! கோகோவுக்கு 1000 சைகை மொழிகள் தெரியும். 2000 ஆங்கில வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும்! ’’கோகோவுக்கும் எனக்கும் அம்மா, மகள் உறவுதான் இருக்கிறது.
10 மனிதர்களுக்கு இணையான பலம் கொண்டவள். எதையும் வேகமாகவும் ஆர்வமாகவும் கற்றுக்கொள்ளக் கூடியவள். புத்தகத்தைப் படிக்கும்போது, விரலை நாக்கில் தடவிவிட்டுதான் புரட்டுவாள். பல் வலி என்றால் மருத்துவரை அழைக்கச் சொல்வாள். திரைப்படங்களில் கொரில்லாக்களை முட்டாளாகவும் முரடாகவும் காட்டுகின்றனர். ஆனால் கொரில்லாக்கள் மனிதர்களைப் போலவே மென்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன. விலங்குகள் மொழி நிபுணர் யுஜின் லிண்டன் கோகோவைப் பரிசோதித்தார். கோகோவின் சைகை மொழிகளைக் கண்டு பிரமித்துப் போனார்.
ஆரம்பத்தில் ஒர்க் என்ற வார்த்தைக்கும் ராக் என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் எல்லாம் தெரியாமல் குழம்பிப் போனவள், இன்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விடுகிறாள். ஒருமுறை என்னுடைய ஷுக்களின் லேஸ்களைக் கட்டிவிட்டு, என்னைத் துரத்திப் பிடி என்றாளே பார்க்கலாம்! கோகோ ஏழு வயதில் நேஷனல் ஜியோகிரபிக் இதழின் அட்டையை அலங்கரித்தாள். கோகோவை வைத்துப் பல வித ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். பல்வேறு ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவளுக்குப் பிடித்த பொருட்களையும் டிவிடிகளையும் பரிசளிப்போம். ஆனால் அவளோ தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்பாள். கோகோவுடன் குடும்பம் நடத்த மைக்கேல் என்ற கொரில்லாவை அழைத்து வந்தோம். ஆனால் மைக்கேல் இறக்கும் வரை கோகோ சேர்ந்து வாழவில்லை. இப்போது இன்னொரு ஆண் கொரில்லாவுடன் வாழ்ந்து வருகிறது. குழந்தை கேட்கும்போது பொம்மைகளைக் கொடுத்தோம், அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.
வேறு வழியின்றி பூனைக்குட்டிகளை அவளிடம் கொடுத்தோம். ஒரு தாய்க்குரிய அன்போடு, பூனைக்குட்டிகளை அக்கறையாகப் பார்த்துக்கொண்டாள். அவற்றுடன் விளையாடினாள். பாட்டிலில் பால் ஊற்றிக் கொடுத்தாள். திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பாள். ஹாலிவுட் நடிகர்கள் ராபின் வில்லியம்ஸ், லியானார்டோ டிகாப்ரியோ போன்றவர்கள் இவளைப் பார்க்க வந்தபோது மிகவும் கூச்சப்பட்டாள். ராபின் வில்லியம்ஸ் இரண்டாவது முறை வந்தபோது நீண்ட நாள் பழகியவள் போல நடந்துகொண்டாள். அவரது அடையாள அட்டையைப் பரிசோதித்து, அவர்தானா என்று உறுதி செய்தாள்.
ராபின் வில்லியம்ஸ் இறந்த தகவல் அறிந்தபோது மிகவும் வருத்தப்பட்டாள். இப்படிப்பட்ட பண்புகள் நிறைந்த கொரில்லாக்களைப் புரிந்துகொள்ளாமல் கடந்த வாரம் ஒரு கொரில்லாவை அமெரிக்காவில் சுட்டுக் கொன்றுவிட்டனர்’’ என்கிறார் 69 வயது பென்னி பேட்டர்சன். வளர்ப்பு கொரில்லாக்கள் வேறு, இயல்பான கொரில்லாக்கள் வேறு என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். கோகோவுக்காக பென்னி திருமணமும் செய்து கொள்ளவில்லை, குழந்தையையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை.
அபூர்வமான மகள்!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாய்ட், தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். சில நாட்களில் புது பாஸ்போர்ட் வந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரது புகைப்படத்தில் சிறிய ஹிட்லர் மீசை வைக்கப்பட்டிருந்தது. ‘’சுற்றுலா செல்வதற்காக அவசரமாக பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் கிடைத்தபோது, அடுத்த 10 ஆண்டுகளுக்குக் கவலை இல்லை என்று நினைத்தேன். பிரித்துப் பார்த்தால் ஹிட்லராக மாறியிருந்தேன். கோபத்துக்கு அளவே இல்லை. என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். எல்லோரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். கோபத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன். இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்காது. விசாரிக்கிறோம். பாஸ்போர்ட்டை மாற்றிக் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படி எல்லாமா விளையாடுவார்கள்?’’ என்கிறார் ஸ்டூவர்ட். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, இங்கிலாந்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
பாவம் ஸ்டூவர்ட்! . thehindu
– See more at: http://www.canadamirror.com/canada/63720.html#sthash.Q8UMoDx2.dpuf