புற்றுநோய் என்ற சொல் நமக்கு அதிகம் பழக்கமான சொல். ஏறத்தாழ அனைவருக்குமே புற்றுநோயைப் பற்றித் தெரியும். ஆண்டுதோறும் பிப்ரவரி நான்காம் தேதி, உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகப் புற்றுநோய் தினம், 2000இல் பாரிஸில் நிகழ்ந்த புற்றுநோய் எதிரான முதல் உலக மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.
சராசரியாக ஆண்டு ஒன்றுக்குப் புற்றுநோயால் 9.9 மில்லியன் மரணங்கள் நிகழ்கின்றன. இவற்றில் 3.7 மில்லியன் மரணங்களை, முறையான சிகிச்சை மூலமும் சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதன் மூலமும் தடுத்திருக்க முடியும்.
27% புற்றுநோய் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படுகிறது. 10% புற்றுநோய் மரபணு பிரச்சினையால் வருகிறது. புற்றுநோய் காரணமாக நிகழும் மரணங்களில் 70% குறைந்த வருவாயுடைய நாடுகளில்தான் நிகழ்கிறது. உலகில் மரணங்கள் நிகழ இரண்டாவது மிகப் பெரிய காரணி, புற்றுநோய்.
குறைந்த வருமானமுடைய நாடுகளில் 90% நாடுகளில் ரேடியோதெரபி பெறுவதற்கான வசதிகள் இல்லை. 2018ஆம் ஆண்டில் மட்டும், புற்றுநோய் காரணமாக 9.5 மில்லியன் மக்கள் இறந்து போவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது முதலானவை புற்றுநோய்க்கான காரணங்களாக அமைகின்றன.
மாதுளை, கீரை வகைகள், திராட்சை, இஞ்சி, மஞ்சள், அத்திப்பழம், தக்காளி, கிரீன் டீ, பூண்டு முட்டைகோஸ், காலிஃப்ளவர் எலுமிச்சை, ஆரஞ்சு, அத்திப்பழம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், புகையைத் தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் புற்றுநோயைத் தவிர்ப்போம், நலமோடு வாழ்வோம்.