உலக சமூக அவையில் பங்குகொள்ளும் ஆர்வலர்களுக்கு விசா மறுப்பு
மொன்றியல் நகரில் நடைபெற உள்ள உலக சமூக அவையின் நிகழ்வுகளில் பங்கேற்க நூற்றுக்கணக்கான ஆர்வலர்களுக்கு கனேடிய குடிவரவு அதிகாரிகளினால் விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தத்தகவலை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வருடாந்தம் நடைபெறும் உலக பொருளாதார அவையின் மாற்றீடாக தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளும் உலக சமூக அவையின் நிகழ்வுகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நிகழ்விற்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையிலே தற்பொழுது ஆர்வலளர்களுக்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. எனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடன் அவசரக் கூட்டமொன்றை நடாத்துமாறு புதிய ஜனநாயகக் கட்சியினர், குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலமைக் கேட்டுள்ளனர்.
கனேடிய விசா பெற்றுக்கொள்ளுதலை வசதியாக்கும் பொருட்டு 2000 பேராளர்களுக்கு அழைப்பிதழ் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தங்களது ஆரம்ப கணிப்பின்படி குறித்த தொகையில் ஏறத்தாழ 70 வீதமானவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் கலந்துகொள்ளவுள்ள பெரும்பாலான பேராளர்கள் கொங்கோ, மொரொக்கோ, ஈரான், நைஜீரியா, ஹைட்டீ மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.