கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்று வரும் உலக இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு தருஷி கருணாரட்ண தகுதி பெற்றார்.
இன்றைய தினம் நடைபெறும் பெண்களுக்கான 800 மீற்றர் அரை இறுதியில் தருஷி பங்கேற்கவுள்ளதுடன், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மெதானி ஜயமான்னவும் களமிறங்கவுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற கம்பஹா திருச்சிலுவை கல்லூரி மாணவியான ஷானிக்கா லக்சானி 2 நிமிடங்கள் 20.37 செக்கன்களில் நிறைவு செய்தபோதிலும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல்போனது.
இப்போட்டியில் 2 நிமிடங்கள் 07.02 செக்கன்கள் என்ற சிறந்த நேரப்பெறுதியை கொண்ட லக்சானி, 13.35 செக்கன்கள் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில், இதே போட்டிப் பிரிவின் இரண்டாவது தகுதிச் சுற்றில் பங்கேற்ற தருஷி, 2 நிமிடங்கள் 10.70 செக்கன்களில் ஓடி மூன்றாவது இடத்தைப் பிடித்து நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆரம்பத்தில் இந்த தகுதிச் சுற்றில் இவருக்கு 4 ஆவது இடமே கிடைத்தபோதிலும் கியூபாவின் கூப்பர் கெஸ்பர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தருஷிக்கு மூன்றாவது இடம் கிடைத்ததுடன், அரை இறுதிக்கும் தகுதி பெற்றார். இவர் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளைய தினம் (20) மாலை 6.47 மணிக்கு ஆரம்பமாகும்.
இதேவேளை, பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 24.08 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியை தனிப்பட்ட சாதனையாக கொண்டுள்ள மெதானி ஜயமான்ன இப்போட்டியின் தகுதிச் சுற்றில் பங்கேற்கவுள்ளார். இப்போட்டி இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.37 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.