இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மரபணு முறையிலான சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் ஒழுங்குறுத்துகை கழகம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதில், கோவேக்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.
இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல், மரபணு தடுப்பூசி இதுவாகும்.
3 டோஸ்களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.
அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ் – டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று அனுமதி அளித்தது.
இந்த தடுப்பூசி மூன்று டோஸ்கள் செலுத்தப்படும். வருடத்திற்கு 100 மில்லியன் முதல் 120 மில்லியன் டோஸ்கள் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.