உலகின் விலை குறைந்த கார் மாடலாக டாடா நானோ அறிமுகமானது. நானோ காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நான்கு அல்லது ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக நானோ கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ.1 லட்சம் விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.
டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவின் முயற்சியால் நானோ கார் உருவானது.இந்தியாவில் பெரும்பாலானோர் வாங்கும் படி பட்ஜெட் விலையிலான கார் ஒன்றை வெளியிட அவர் விரும்பினார். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவற்றுக்கு மாற்றாக புதிய நானோ காரை வாங்குவர் என ரத்தன் டாடா நம்பினார்.
பின் பொறியாளர்களின் கடும் முயற்சியில் உருவான டாடா நானோ உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றது. எனினும், காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. துவக்கத்தில் நானோ கார் மாதம் வெறும் 100 யூனிட்களே விற்பனையானது.