உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் போலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான மெக்டா லினெட் உடனான போட்டியின்போது , இடது பக்கவாட்டு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அஷ்லி பார்ட்டி அறிவித்தார்.
இப்போட்டியின் முதல் செட்டை 6 க்கு 1 என்ற கணக்கில் மெக்டா லினெட் கைப்பற்றியிருந்ததுடன், இரண்டாவது செட்டில் 2 க்கு 2 என்ற கணக்கில் காணப்பட்டபோது அஷ்லி பார்ட்டி விலகிக்கொள்ளவே, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் மெக்டா லினெட்.
ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி ஆகிய தொடரிலிருந்து விலகியுள்ளதால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெலாரசின் விக்டோரியா அசரென்கா மற்றும் நடப்புச் சம்பியனான போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் ஆகியோரில் ஒருவர் சம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக டென்னிஸ் விமர்சகர்கள் கருதுகின்றனர்.