யுத்த காலத்தில் அரசாங்கமாக உலக நாடுகளிடம் ஆயுத உதவி கேட்டீர்கள், இப்போது உலக நாடுகளிடம் கடன் கேட்கின்றீர்கள்.
ஆனால் நாம் எமது அரசியல் உரிமையை பெற்றுத்தருமாறுதான் அயலில் உள்ள வல்லரசு நாட்டிடம் கேட்கின்றோம். நாம் அயல் நாடுகளிடம் நீதி கேட்டிபதில் என்ன தவறு உள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசின் பொருளாதார ,அபிவிருத்தி திட்டங்களுக்கு கொள்கைகளை மறந்து உதவி செய்ய வேண்டும்.
ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுள்ளார். இது வேடிக்கையான விடயம். ஐந்து சதத்திற்கு கூட பெறுமதியில்லாத கொள்கை விளக்க உரையை ஆற்றிவிட்டு,எங்களுடைய மக்களை முட்டாள்களாக்கிவிட்டு ,ஏமாற்றிவிட்டு தங்களுக்கு ஆதரவு தரவேண்டுமென கேட்பது கேலிக்கூத்தானது.
‘உனக்கல்லடி உபதேசம் ஊருக்குத்தான்” என்பதுபோல் இங்கே ஜனாதிபதி உரையாற்றுகின்றார். அதே நேரத்தில் எங்களுடைய மண் ஆக்கிரமிக்கப்படுகின்றது, கபளீகரம் செய்யப்படுகின்றது,
ஜனாதிபதி உரையாற்றுகின்ற வேளையில் கூட இராணுவத்தினர், தொல்பொருள் திணைக்களத்தினர் ,வன இலாகா திணைக்களத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் என பல தரப்பினர் எமது மண்ணை ஆக்கிரமிக்கப்படுவதற்கு நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டுமாம்.
நாம் பெயரளவில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றோம். வன்னி மண்ணில் இருக்கின்ற அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அந்த மாவட்டங்களின் இணைத்தலைவர்கள் எம்மை புறக்கணித்து தன்னிச்சையாக,தங்கள் நினைத்தவாறாக செயற்படுகின்றார்கள். அரச அதிபர்கள்.
பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் இந்த அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அளுத்தங்களுக்கு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.
இதேவேளை இந்திய பிரதமர் மோடிக்கு நாம் எமது மக்களின் பிரச்சினைகளை சொல்லி , 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அதிகாரங்களை பயன்படுத்த வேண்டுமெனவும் தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கைகளை விடுத்தோம். அதற்கான ஆவணத்தை கையளித்துள்ளோம்.
அதைப்பார்த்தது நீங்கள் எங்களுடன்தான் பேச வேண்டும் இந்தியாவிடம் கேட்டு பயனில்லையென இங்குள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர்.
யுத்தத்தின் போது சர்வதேச நாடுகளிடம் ஆயுத உதவி, நிதி உதவி கேட்ட அரசு எமது பிரச்சினைகளை தீர்க்காத பட்சத்திலேயே நாம் எமது அயல் நாடான இந்தியாவிடம் எமது பிரச்சினைகளை தீர்த்தது வைக்குமாறு கோருகின்ற போது இங்குள்ள அமைச்சர்கள் கொக்கரிக்கின்றனர்.
இந்தப்பிரச்சினை நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினை .இந்த அரசு எமது பிரச்சினையை தீர்த்திருந்தால் நாங்கள் ஏன் இந்தியாவிடம் போகப்போகின்றோம்?நீங்கள் உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கின்றீர்கள்.
நிதி கேட்கின்றீர்கள், கடன் கேட்கின்றீர்கள். ஆனால் நாம் எமது அரசியல் உரிமையை பெற்றுத்தருமாறுதான் அயலில் உள்ள வல்லரசு நாட்டிடம் கேட் கின்றோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]