தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளும், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையமாகக்கொண்டு உலகத்தமிழர் பேரவையினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியை அரசாங்கத்துக்கு ‘வெள்ளையடிக்கும்’ செயற்பாடாகவே தாம் கருதுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.
அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத்தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும், இவ்விடயத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் இன்று புதன்கிழமை (13) கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் நேபாளத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஏப்ரல் 27 இல் கைச்சாத்திடப்பட்ட 6 அம்சங்களை உள்ளடக்கிய ‘இமயமலை’ பிரகடனத்தைக் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ள உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள், அதுகுறித்து இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்து அப்பிரகடனத்துக்கு அங்கீகாரம் கோரியுள்ளனர்.
முதன்முதலாக உலகத்தமிழர் பேரவை உருவாக்கப்பட்டபோது, அது பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கியதோர் குடை அமைப்பாகவே காணப்பட்டது. அதன்படி அவ்வமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அங்கம்வகித்த (பின்னர் அதிலிருந்து விலகிய) பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப்பிரகடனத்தைக் கண்டித்தும், விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக உலகத்தமிழர் பேரவையானது புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தம்மைக் காண்பித்துக்கொள்வது தவறு எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் உலகத்தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் எம்மைச் சந்தித்து இதுகுறித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியிருந்தார். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு அக்கோரிக்கையை அடியோடு நிராகரித்ததுடன், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அவருக்குரிய பதிலும் அனுப்பிவைக்கப்பட்டது.
மாவீரர் நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றுகூடியவர்களுக்கு எதிராகத் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கின்றது. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவழிப்பு அரங்கேற்றப்பட்டுவருகின்றது.
இவ்வாறு அடக்குமுறைகள் மேலோங்கியுள்ள சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தி உலகத்தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அதுமாத்திரமன்றி முன்னைய காலங்களில் தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக செயற்பட்டுவந்த உலகத்தமிழர் பேரவை, இன்னமும் அதிலிருந்து மாறவில்லை என்பதையும் இந்நகர்வு வெளிப்படுத்துகின்றது.
உலகத்தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர், குறிப்பாக இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அங்கீகரித்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் கூட்டமைப்பு உலகத்தமிழர் பேரவையுடன் மிகநெருங்கிய உறவைப் பேணிவந்திருப்பதுடன், கூட்டமைப்பிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாத அதன் தொடர்ச்சியாகவே பேரவை இயங்கிவருகின்றது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படுவதாகக் கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் விளைவாகவே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குவங்கி வெகுவாகச் சரிவடைந்தது.
எனவே எதிர்வரும் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்கநேரும் என்பதால் கூட்டமைப்பு ‘நல்ல பிள்ளையாக’ செயற்பட முயற்சிக்கின்றது.
அதன்படி தமது வாக்குவங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத்தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது.
‘இமயமலை’ பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 6 அம்சங்களும் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினருக்கோ அல்லது அண்மையில் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தமைக்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்காது.
மாறாக அவை தமிழர் தாயகப்பகுதிகளில் திட்டமிட்ட விதத்தில் இடம்பெற்றுவரும் இனவழிப்பை மூடிமறைத்து, அதனை நேர்மறையான விதத்தில் காண்பிப்பதற்கும், தற்போதைய அரசியலமைப்பில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதன் ஊடாக தமிழ்மக்களுக்குப் போலியான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும், பொறுப்புக்கூறலுக்கு முற்றுப்புள்ளிவைத்து போலியான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்குவதற்குமே பங்களிப்புச்செய்யும்.
எனவே இதனை முற்றாக நிராகரிக்கவேண்டுமெனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்கநேரும் என்ற பாடத்தை அவர்களுக்குப் புகட்டவேண்டும் எனவும் தமிழ்மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.