இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆப்கானிஸ்தான் 7ஆவ து நாடாக நேரடி தகுதிபெற்றுக்கொண்டது.
இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி மழையினால் கைவிடப்பட்டதை அடுத்தே ஆப்கானிஸ்தானுக்கு உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக பங்குபற்ற வாய்ப்பு கிடைத்தது.
அதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக பங்குபற்றும் இலங்கையின் வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 208 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்த இலங்கைக்கு இயற்கை அன்னை கைகொடுக்கவில்லை. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு 10 புள்ளிகள் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்தப் போட்டி முடிவுடன் இலங்கை 67 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 10ஆவது இடத்தில் இருக்கின்றது.
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக்கில் இலங்கைக்கு இன்னும் 4 போட்டிகளே மிஞ்சி இருக்கிறது. அந்த நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் இலங்கை 8ஆம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானுடனான போட்டியைத் தொடர்ந்து இலங்கை அதன் கடைசி சுப்பர் லீக் தொடரில் நியூஸிலாந்தை 3 போட்டிகளில் அந் நாட்டில் சந்திக்கவேண்டியுள்ளது. நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்வது இலங்கைக்கு இலகுவாக அமையப்போவதில்லை.
தற்போது 88 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், 68 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருக்கும் அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது சுப்பர் லீக் போட்டிகளை நிறைவு செய்துவிட்டன. இந்த இரண்டு நாடுகளை முந்திக்கொண்டு 8ஆவது இடத்தை இலங்கை பெறவேண்டுமானால் இன்னும் 3 வேற்றிகளை ஈட்டவேண்டும். எனினும் தென் ஆபிரிக்காவிடம் இருந்து இலங்கை சவாலை எதிர்கொள்ள நேரிடும்.
தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 5 போட்டிகள் மீதமிருப்பதுடன் அந்த ஐந்து போட்டிகளும் தென் ஆபிரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும் நெதர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா விளையாடவுள்ளது.
தற்போது 59 புள்ளிகளுடன் 11ஆம் இடத்திலிருக்கும் தென் ஆபிரிக்கா எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 109 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திற்கு முன்னேறும்.
இலங்கை எஞ்சய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 107 புள்ளிகளை மாத்திரமே பெறும். எனவே இந்த இரண்டு அணிகளும் புள்ளிகளுக்கான நேரடி போட்டியை எதிர்கொண்டுள்ளன.
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் வரவேற்பு நாடு என்ற வகையில் இந்தியா இயல்பாகவே தகுதிபெற்றுவிட்டது.
இந்தியாவை விட இங்கிலாந்து (125 புள்ளிகள்), நியூஸிலாந்து (125), அவுஸ்திரேலியா (120), பங்ளாதேஷ் (120), பாகிஸ்தான் (120), ஆப்கானிஸ்தான் (115) ஆகிய 6 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
எட்டாவது நாடாக உலகக் கிண்ணப் போட்டியில் தகுதிபெறப்போகும் அணி எது என்பது அடுத்த வருடம் மார்ச் மாதம் தெரிந்துவிடும்.
அதன் பின்னர் சுப்பர் லீக் தொடர் முடிவில் 9ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடம்வரை 5 இடங்களை வகிக்கும் நாடுகள், இணை அங்கத்துவ நாடுகளுடன் தகுதிகாண் சுற்றில் விளையாடி அதில் முதல் 2 இடங்களைப் பெறும் நாடுகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெறும்.