லார்ட்சில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி அபாயகரமான இங்கிலாந்து அணியை 228 ரன்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமியின் பந்து வீச்சு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 33-வது ஓவரில் இவர் சாரா டெய்லர் (45), வில்சன்(0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை.
மொத்தம் 10 ஓவர்களை வீசிய ஜுலன் கோஸ்வாமி 3 மெய்டன்களுடன் வெறும் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளுக்குப் பிறகு அரைசதம் எடுத்த அபாய வீராங்கனை ஸ்கிவரை (51) எல்.பி.செய்து 3 மிக முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு பினடைவை ஏற்படுத்தினார் ஜுலன் கோஸ்வாமி.
லெக்பிரேக் கூக்ளி பவுலர் பூனம் யாதவ் 10 ஓவர்களில் 36 ரனக்ளுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ராஜேஸ்வரி கெயக்வாட் 49 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். வேகப்பந்தில் பாண்டே மட்டும் சோபிக்கவில்லை இவர் 7 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹர்மன்பிரீத் கவுர் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
தொடக்கத்தில் இங்கிலாந்து வீராங்கனைகள் வின்பீல்ட் (24), பியுமோண்ட்(23) ஆகியோர் 11 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அப்போது ராஜேஸ்வரி கெயக்வாட் முதல் விக்கெட்டைச் சாய்க்க பூனம் யாதவ் 2-வது விக்கெட்டை வீழ்த்தினார். கேப்டன் நைட்டையும் பூனம் யாதவ் வீழ்த்த இங்கிலாந்து 16.1 ஓவர்களில் 63/3 என்று சோர்வடைந்தது.
ஆனால் அதன் பிறகு சாரா டெய்லர், ஸ்கிவர் இணைந்து ஸ்கோரை 146 ரன்களுக்குக் கொண்டு சென்ற போதுதான் அபாயக் கூட்டணியை ஜுலன் கோஸ்வாமி முறியடித்து இதே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் பிறகு சாரா டெய்லரையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.
கடைசியில் பிரண்ட் 34 ரன்களையும், கன் 25 ரன்களையும், மார்ஷ் 14 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து 228 ரன்களை எட்டியது.
இந்திய அணிக்கு கனவு உலகக்கோப்பையை கைப்பற்ற 229 ரன்கள் தேவை.