தகுதிச்சுற்றுப் போட்டியில் கொசாவோ அணியை 2-0 என்று வீழ்த்திய ஐஸ்லாந்து அணி 2018 ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்துத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்ற முதல் ஆகச்சிறிய நாடு என்ற பெருமையைத் தட்டிச் சென்றது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்து மக்கள் தொகை சுமார் 3,50,000 என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு முன்னதாக உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு டிரினிடாட் டொபாகோவாகும் இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியனாகும். 2006-ம் ஆண்டு டிரினிடாட் அணி தகுதி பெற்றது, இப்போது ஐஸ்லாந்து தகுதி பெறும் வரை உலகின் மிகவும் சிறிய நாடு ஒன்று உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் பட்டியலில் டிரினிடாட் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூரோ 2016 கால்பந்து கோப்பையில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஐஸ்லாந்து, அதற்கு சரியாக 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐஸ்லாந்து அணியின் ஜில்ஃபி சிகர்ட்சன் மற்றும் ஜொஹான் குட்மண்ட்சன் ஆகியோர் இரண்டு கோல்களை கோசாவா அணிக்கு எதிராக அடித்து 2018 உலகக்கோப்பைக்கு அணியை தகுதி பெறச் செய்தனர்.
இந்த அணியின் பயிற்சியாளர் ஒரு பல் மருத்துவராவார், இவர் பெயர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன். இவரது பயிற்சியின் கீழ் சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐஸ்லாந்து தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களில் 22 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றுள்ளது.