உலககக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரான்ஸ் அணி வீரர்கள் சிலருக்கு சுகவீனங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளைஇ கறுப்புச் சந்தையில் 52 லட்சம் இலங்கை ரூபா (12 லட்சம் இந்திய ரூபா) வரையான விலையில் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் பிரான்ஸும் முன்னாள் சம்பியன் ஆர்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. கத்தாரின் தலைநகர் தோஹாவிலிருந்து 23 கிலோமீற்றர் தூரத்திலுள்ள, அந்நாட்டின் 2 ஆவது மிகப் பெரிய நகரான லூசெய்லின், லூசெய்ல் அரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
பீபாவினால் 22 தடவையாக நடத்தப்படும் உலகக் கிண்ண சுற்றுப்போட்டி இது. இந்நிலையில், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் ஆகிய இரு அணிகளும் 3 தடவையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முயற்சிக்கின்றன.
ஆர்ஜென்டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் உலக சம்பியனாகியது. 1930, 1990, 2014 ஆம் ஆண்டுகளின் இறுதிப்போட்டிகளில் ஆர்ஜென்டீனா தோல்வியுற்றது.
பிரான்ஸ் 1998, 2018 ஆம் ஆண்டுகளில் உலக சம்பியனாகியது. 2006 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் தோல்வியுற்றிருந்தது.
இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 42 மில்லியன் டொலர்கள் (சுமார் 1,558 கோடி இலங்கை ரூபா) பணப்பரிசு வழங்கப்படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்கள் (1,113 இலங்கை கோடி ரூபா) வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
ஆர்ஜென்டீனாவும் பிரான்ஸும் 1930 முதல் இதுவரை 12 தடவைகேள சர்வதேச போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. இவற்றில் ஆர்ஜென்டீனா 6 தடவைகளும் பிரான்ஸ் 3 தடவைகளும் வென்றுள்ளன.
உலகக் கிண்ண வரலாற்றில் 3 தடவைகள் இவ்வணிகள் மோதியதில் 2 தடவைகள் ஆர்ஜென்டீனாவும், ஒரு தடவை பிரான்ஸும் வென்றன.
எனினும், இவ்விரு அணிகளும் இறுதியாக 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் 2 ஆவது சுற்றில் மோதின. அப்போட்டியில் 4:3 கோல் விகிதத்தில் பிரான்ஸ் வென்றது.
1958, 1962 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் இதுவரை எந்த நடப்புச் சம்பியனும் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளவில்லை.
1990 இல் அப்போதைய நடப்புச் சம்பியன் ஆர்ஜென்டீனாவும் 1998 இல் நடப்புச் சம்பியன் பிரேஸிலும் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றன.
கால்பந்தாட்டத்துறையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லவில்லை. 2014 ஆம் ஆண்டின் இறுதிப்போட்டியில் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா, ஜேர்மனியிடம் தோல்வியுற்றிருந்தது.
இது தனது கடைசி உலகக்கிண்ணப் போட்டி என லியோ மெஸி அறிவித்துள்ள நிலையில், உலக சம்பியனாக, உலகக் கிண்ணத்திலிருந்து விடைபெற மெஸியும் அவரின் ரசிகர்களும் விரும்புகின்றனர்.
35 வயதான மெஸி இச்சுற்றுப்போட்டியில் 5 கோல்களைப் புகுத்தி, இதுவரை அதிக கோல்களைப் புகுத்திய 2 வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
மறுபுறம் நடப்புச் சம்பியன் பிரான்ஸும் மிகப் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் எதிர்வரும் 26 ஆம் திகதி தனது 36 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். இம்முறை பிரான்ஸ் சம்பியனானால் 2 தடவைகள் பீபா உலகக் கிண்ணத்தை வென்ற முதல் அணித்தலைவராக ஹியூகோ லோறிஸ் சாதனை படைப்பார். பிரெஞ்சு அணியின் கோல் காப்பாளர் அவர்.
தங்கப் பாதணியை நோக்கி…
பிரான்ஸின் கோல் மெஷினாக கருதப்படுவர் கிலியன் எம்பாப்பே, நாளை மறுதினம் (20) தனது 24 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள எம்பாப்பே, இந்த உலகக் கிண்ணத்தில் 5 கோல்களைப் புகுத்தியுள்ளார். இச்சுற்றுப்போட்டியில் இதுவரை அதிக கோல்களைப் புகுத்தியவர்களில் மெஸியுடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இச்சுற்றுப்போட்டியில் அதிக கோல்களைப் புகுத்தியர்களில் 2 ஆம் இடத்தில் உள்ளவர்கள் ஆர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸும் பிரான்ஸின் ஒலிவர் கிரூட்டும். இவர்கள் தலா 4 கோல்களைப் புகுத்தியுள்ளனர். இச்சுற்றுப்போட்டியில் அதிக கோல்களை புகுத்திய பட்டியலிலுள்ள முதல் 4 வீரர்களும் இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நால்வரின் ஒருவர் தங்கப்பாதணி விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
மத்தியஸ்தர்
இறுதிப் போட்டியின் மத்தியஸ்தராக போலந்தைச் சேர்ந்த சிமோன் மர்சினியாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் சுற்றில் பிரான்ஸ் வெற்றிபெற்ற டென்மார்க்குக்கு எதிரான போட்டி, 2 ஆவது சுற்றில் ஆர்ஜென்டீனா வென்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஆகியவற்றிலும் மத்தியஸ்தராக, 41 வயதான மர்சியாக் பணியாற்றியிருந்தார்.
அவரின் சக நாட்டவர்களான பவெல் சோகோல்னிக்கி, தோமஸ் லிஸ்திகீவிக்ஸ் ஆகியோர் உதவி மத்தியஸ்தர்களாக பணியாற்றவுள்ளனர்.
52 இலட்சம் ரூபா ரிக்கெட்
இறுதிப்போட்டியை பார்வையிட விரும்பும் ஆர்ஜென்டீன ரசிகர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ரிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியுற்றுள்ளனர். ரிக்கெட் பெற உதவுமாறு
ஆர்ஜென்டீன கால்பந்தாட்டச் சம்மேளனத்தை வலியுறுத்துவதற்காக, தோஹாவில் ஆர்ஜென்டீன குழாத்தினர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே 2 நாட்களாக ஆர்ஜென்டீன ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இறுதிப்போட்டிக்குரிய மலிவான ரிக்கெட்களுக்கு பீபா 750 டொலர்கள் (278,000 இலங்கை ரூபா) விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் அவை 4,000 டொலர்களுக்கு (சுமார் 15 லட்சம் இலங்கை ரூபா) கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மிக அதிக விலையுள்ள 5,850 டொலர்கள் (சுமார் 21 லட்சம் ரூபா) பெறுமதியான ரிக்கெட்கள், கறுப்புச் சந்தையில் 14,000 டொலர்களுக்கு (சுமார் 5,200,000 லட்சம் இலங்கை ரூபா, 12 லட்சம் இந்திய ரூபா) விற்கப்படுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
லூசெய்ல் அரங்கில் 88,900 பேருக்கான இடவசதி உள்ளது. தற்போது 30 ஆயிரத்துக்கு அதிகமான ஆர்ஜென்டீனியர்கள் கத்தாரில் உள்ளனர் எனவும், பலர் கடன் வாங்கிக் கொண்டு, கத்தாருக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரோக்கியப் பாதிப்புகள்
பிரான்ஸின் சில வீரர்களுக்கு மர்ம வைரஸ் பாதிப் பொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற பிரெஞ்சு குழாம் பயிற்சியில் ரபாயெல் வரேன், இப்ராஹிமா கொனாட்டே, கிங்ஸ்லி கோமன் ஆகிய மூவரும் பங்குபற்றவில்லை.
இவ்வீரர்களுக்கு தடிமன் போன்ற அறிகுறிகள் தென்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மொரோக்கோவுடனான அரை இறுதி அட்ரியென் ரபியொட், டெயோட் உபாமெகானோ ஆகியோர் விலகியிருந்தனர். எனினும் இவ்விருவரும் பின்னர் பயிற்சிகளுக்குத் திரும்பியமை குறிப்பிடத் தக்கது.
ஆர்ஜென்டீன அணித்தலைவர் மெஸியும் நேற்றுமுன்தினம் பயிற்சியில் பங்குபற்றவில்லை. அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என செய்தி வெளியாகியிருந்தது. எனினும், மெஸிக்கு பாதிப்பு இல்லை எனவும் அவர் இறுதிப் போட்டியில் விளையாடுவார் எனவும் ஆர்ஜென்டீன ஊடகமான கிளேரின் தெரிவித்துள்ளது.