இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே பதில் உயர் ஸ்தானிகரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் படிப்படியாக தயாராகி வருவதால், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தற்போது நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது என பிரதமர் ராஜபக்ஷ பதில் உயர் ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.
குறிப்பாக, வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை முன்னுரிமை விடயங்கள் குறித்து பிரதமர் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதில் பிரித்தானிய அரசாங்கமும் அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர் என பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
மேலும் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தன இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார் என்றும் பதில் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த சந்திப்பின்போது இருவரும் துறைமுக நகரத்தின் முன்னேற்றம், முதலீட்டை ஈர்த்தல், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.