மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செயற்கைக் கோள் மீடியாக்கள் எல்லாம் விவாதங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அவர்களின் பார்வையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகதான் கட்சிகள். மற்றபடி தனி நபர்களை முக்கியத்துவப்படுத்தும் சில சில கட்சிகளை மட்டுமே தங்கள் ஒளிபரப்பு வானத்தில் மின்னவிடுகிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த பல்வேறு தொடர் போராட்டங்கள், உறுதியான போராட்டங்கள், வலிமையான போராட்டங்களில் மேற்குறிப்பிட்ட பெருங்கட்சிகளின் பங்கு எதுவும் இல்லை என்பதே உண்மை. சின்னச் சின்ன என்றும் உதிரிக் கட்சி என்றும் வெகுஜன ஊடகங்களால் கேலி பேசப்படும் இயக்கங்கள்தான், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் செறிவான, சோரம் போகாத போராட்டங்களை முன்னெடுத்தன, முன்னெடுத்து வருகின்றன.
உதிரிக் கட்சிகள் என பொதுப் புத்தியில் பொறித்து வைக்கப்பட்டுள்ள உறுதிக் கட்சிகளும், அமைப்புகளும் தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நெய்வேலி தொழிலாளர் பிரச்சினை, காவிரிப் போராட்டம், கூடங்குளம் போராட்டம், தூத்துக்குடிப் போராட்டம், நியூட்ரினோ போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை எந்த வாக்குப் பலனும் இல்லாமல் நிகழ்த்தி வருகின்றன.
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரிய கட்சிகள் சீட்டுகள், கோடிகள் அடிப்படையில் கூட்டணி பேரம் பேசி வருகிறபோது…. சமீப ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ந்து போராடிய இந்த சிறுசிறு கட்சிகள், குழுக்கள், கட்சிகள் ஏன் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்ற யோசனையும் அதைத் தொடர்ந்த விவாதமும் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிலரிடம் பேசினோம்.
“தொழில் முறை கட்சிகளை விட எங்களுக்குப் பெரிய அளவு வாக்குகள் கிடைக்காது. இப்போதைய தேர்தல் நடைமுறையில் செலவு செய்வதற்கு கோடிக்கணக்கான பணமும் கிடையாது. ஆனால், இதையெல்லாம் எதிர்பார்த்து நாங்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. உணர்வு ரீதியாக முன்னெடுத்தோம், போராட்டங்களை ஒருங்கிணைத்தோம், போராடினோம். ஆனால், இந்தப் போராட்டங்களுக்கான பலனை ஆளுங்கட்சியும், பெரிய கட்சிகளும் எங்களுக்குக் கிடைக்கவிடாமல் தங்களது ஊடக பலத்தால் தங்களை உயரே காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களுக்கு மக்கள் சந்திப்புகளும், சமூகதளங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில், போராட்டங்களில் காட்டிய இந்த ஒருங்கிணைவை தேர்தலிலும் காட்டினால் என்ன என்ற யோசனை இப்போது உருவாகியிருக்கிறது. பெரிய கட்சிகளைக் கூட ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்துவிடலாம். ஆனால் இந்த சிறு சிறு கட்சிகளை ஒருங்கிணைப்பது மிகக் கடினம். தமிழ்நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடும் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஓர் அணியை உருவாக்க முயற்சி இப்போது தொடங்கியுள்ளது. வெறும் வாக்கு மட்டுமே குறிக்கோள் அல்ல. தேர்தல் களத்தில் பெரும்பாலும் தனி மனித துதிபாடல்களும், தாக்குதல்களுமே நடக்கின்றன.
முக்கியமான பிரச்சினைகளை தேர்தல் பிரச்சினைகளாக ஆக்காததால்தான் தமிழர்களுக்கு எதிரான பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே கூடங்குளம், தூத்துக்குடி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், டெல்டா பெட்ரோலிய மண்டலம் உட்பட அடிப்படைப் பிரச்சினைகளை தேர்தல் களத்தில் எதிரொலித்து இவற்றையும் தேர்தல் பிரச்சினைகளாக ஆக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளோம்” என்றனர்.
சமீப காலங்களாக நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தமிழர் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னெடுத்து வரும் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.
“நாம் தமிழர் அமைப்பினருடன் இணைந்து சில போராட்டங்களை நடத்தி வருகிறோம். பொதுவாகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருக்கிறோம். எனவே போராட்ட அளவில் மட்டுமே நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்” என்றார்.
ஏற்கனவே தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தி வரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம்.
“தமிழகத்தில் இன்னும் தெளிவான கூட்டணி அமையவில்லை. எந்த அணியில் எந்தக் கட்சி இருக்கும், எந்தக் கட்சி வெளியே வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வது போல ஓர் அணியை அமைப்பதற்கான சூழல் பற்றி இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.