நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசுக்கான தேர்தலில் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி உள்ளிட்ட 14பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தேச மக்களாகிய எம்மை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசின் தமிழின உரிமை மறுப்பு, இனப்படுகொலை, தாயக ஆக்கிரமிப்பு போன்றவற்கு எதிராக தனி ஈழத்திற்காக போராடும் நாம் எமது அமைப்புக்களிலும் செயற்பாடுகளிலும் ஜனநாயகத்தை சரியாக பின்பற்றுவதுடன், தமிழ் தேசிய பற்றாளர்களை நோகடிக்காமல் அணைத்துச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசுக்கான தேர்தலில் தமிழ் தேசிய பற்றாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு நடந்து கொண்ட தேர்தல் ஆணையகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும்.
அத்துடன் தேர்தல் ஏற்பாடுகள் உடன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். புதிய திகதியில் தேர்தல் நடாத்தி நாடு கடந்த தமிழீழ அரசின் புதிய அரசை வலுவான வகையிலும் எழுச்சியான முறையிலும் நிறுவ திரு வி. உருத்திரகுமாரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயவு செய்து தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டு ஸ்ரீலங்கா அரசு எம்மை குறை, குற்றம் கூற ஏதுவான சூழலை உருவாக்காமல், எமது விடுதலைப் பயணத்தை வலுவாக முன்னெடுக்கும் வகையில் தங்கள் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை அன்புரிமையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை