வட குவீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை வீரர் அண்ட்றூ சைமண்ட்ஸ் பலியானார்.
இறக்கும்போது அவருக்கு 46 வயது.
கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சைமண்ட்ஸ் வாழ்ந்துவந்த டவுன்ஸ்வில் பகுதியிலிருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹார்வி ரேஞ் பகுதியில் இடம்பெற்ற இந்த ஒற்றைக் கார் விபத்து தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குவீன்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றதென அறிவதற்கு அவசர சிகிச்சை பிரிவினர் முயற்சித்தபோதிலும் அதற்கு முன்னர் சைமண்ட்ஸின் உயிர் பிரிந்தது.
ஆடுகளத்தில் நேர்மையாளராகத் திகழ்ந்ததுடன் வேடிக்கை குணத்துடன் காணப்படும் சைமண்ட்ஸின் மறைவுக்கு அதிர்ச்சிக்கு மத்தியில் முன்னாள் வீரர்கள் பலர் தமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளனர்.
சகலதுறை வீரராக வலம்வந்த சைமண்ட்ஸ், அதிரடி ஆட்டக்கரராகவும் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல்பந்துவீச்சு ஆகிய இரண்டு வகையிலும் பந்துவீசக்கூடிய ஆற்றலைக் கொண்டவருமாக இருந்தார்.
அத்தடன் ஒரு சிறந்த களத்தடுப்பாளராகவும் பலரது பாராட்டுதல்களைப் பெற்றவராவார்.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் பிறந்த அவர், இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருக்கலாம்.
1995இல் இங்கிலாந்து ஏ அணிக்கு அழைக்கப்பட்டபோது அதனை அவர் நிராகரித்தார்.
அதன் பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டி மூலம் 1998இல் அவுஸ்திரேலிய அணியில் அறிமுகமானார்.
ஆறு வருடங்கள் கழித்து டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிரான போட்டி மூலம் அறிமுகமானார்.
2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அவுஸ்திரேலியா தடுமாறிக்கொண்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் களம் புகுந்த அண்ட்றூ சைமண்ட்ஸ் அதிரடியாக 143 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்திருந்தார்.
மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 26 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களுடன் 1,462 ஓட்டங்களையும் 198 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 சதங்களுடன் 5,088 ஓட்டங்களையும் பெற்றார். 14 சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்திய அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 133 விக்கெட்களையும் சர்வதேச இருபது 20 போட்டிகளில் 8 விக்கெட்களையும் கைப்பற்றினார்.