உயிரணுவை தானம் தந்தால் ரூ. 67,000 அல்லது ஐபோன்
உயிரணு வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், அதை தானம் செய்ய சீன இளைஞர்களுக்கு அந்த நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் உள்ள உயிரணு வங்கிகளில் தற்போது உயிரணு (விந்தணு) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஒரு குழந்தை திட்டம் கைவிடப்பட்டு, தற்போது தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சீனாவில் மலட்டுதன்மை அதிகரித்துள்ளதால், பலரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் உயிரணு வங்கிகள் மூலம் தானம் பெற்று குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது. இது கன்பூசியசின் கொள்கைக்கு விரோதமானது எனவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்களிடம் அது எடுபடவில்லை. இந்நிலையில், உயிரணு வங்கிகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உயிரணு தானம் செய்யக்கோரி 20 வயது முதல் 45 வயது வரையிலான ஆண்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு அரசு, சமூக வளைதளங்களில் வீடியோ கேம்ஸ் கதாநாயகர்களின் படத்துடன் விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. மேலும் உயிரணு தானம் செய்தால் ரூ. 67,000 அல்லது ஐபோன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டுப்பற்றை வலியுறுத்தியும் உயிரணு தானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் உயிரணு தானத்தை வலியுறுத்தி பீஜிங் உயிரணு வங்கி ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில் “உயிரணு தானம் செய்வதும் ரத்தம் தானம் செய்வதும் ஒன்றே. அவை அனைத்து சமூகத்துக்கே திரும்ப கிடைக்கிறது” என தெரிவித்துள்ளது.