பங்களாதேஷின் பிரதான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான முஷ்பிக்குர் ரஹிம் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஷ்பிக்குர் ரஹமின் வலது பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் பூரண குணமடைவதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் செல்லும் என அணியின் உடற்கூற்று மருத்துவர் பய்ஜேதுல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக திங்கட்கிழமை (18) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தஸ்கின் அஹ்மத் வீசிய பந்தை பிடிக்க முயற்சித்தபோது விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமின் வலது பெரு விரலை பந்து தாக்கியது.
பந்து பெரு விரலில் பட்டதும் கடும் வேதனைக்குள்ளான ரஹிம், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து விக்கெட் காப்பில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலககை நோக்கி பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது முஷ்பிக்குர் ரஹிம் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியில் பங்காற்றி இருந்தார்.
போட்டி முடிவடைந்த பின்னர் வைத்தியசாலைக்கு விரைந்த முஷ்பிக்குர் ரஹிமுக்கு கதிர்வீச்சுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது பெருவிரல் மூட்டில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் தற்போது சிகிச்சையுடன் ஓய்வு பெற்று வருகிறார்.