குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.
வீடுகளிலும், வெளி இடங்களிலும் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி மீண்டும் உணவு தயாரிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அப்படி சமைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. அதிலிருக்கும் கொழுப்புகள், மீண்டும் சூடுபடுத்தப்படும்போது எதிர்வினை புரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.
தீராத நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தும்போது அழற்சி பாதிப்பு தோன்றும். உடலில் உள்ள ஆரோக்கிய செல்கள் வினைபுரிந்து ஆரோக்கியமற்ற செல்களாக மாறி தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு இந்த எண்ணெய் பயன்பாடும் ஒருவகையில் காரணமாக அமைகிறது.
அதிக வெப்பநிலையில் எண்ணெய்யை சூடுபடுத்தும்போது ப்ரீ ரேடிக்கல் என்ற நிலையை அடையும். அதே எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தும்போது ‘டோட்டல் போலார் சேர்மம்’ உருவாக வழிவகுக்கும். இந்த சேர்மம் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாற்றிவிடும். மேலும் இந்த சேர்மத்தில் இருக்கும் நச்சுத்தன்மை இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுடன் தொடர்புடையது.
எண்ணெய் மீண்டும் மீண்டும் வெப்பமடையும்போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து, ரசாயன பண்புகளையும் இழந்துவிடும். டிரான்ஸ் கொழுப்பும், ப்ரீ ரேடியல் அளவும் அதிகரித்துவிடும். எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது நச்சுகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.
குறிப்பாக கர்ப்பிணிகள் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் கருவில் வளரும் குழந்தைக்கும் சென்றடையும். நட்ஸ், முழு தானியங்கள், மீன்கள் போன்ற இயற்கை மூலங்களில் இருந்து கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவதும், அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வதும் தாய்க்கும்- சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொழுப்பை அதிகம் நுகர்ந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும். அதனால் கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே கர்ப்பிணிகள் எப்போதும் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்றினால் வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அசிடிட்டி பிரச்சினையும் உண்டாகும். துரித உணவுகள் பெரும்பாலும் எண்ணெய்யில் நன்றாக வறுத்தெடுக்கப்படுகிறது. ஏற்கனவே உபயோகித்த எண்ணெய்யிலும் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் அதை தவிர்க்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.