உறவின் அருமை!
அனிதாவின் அப்பா சாலை விபத்தில் இறந்தபோது, அவளுக்கு 12 வயது. அவளுக்கு அந்த இழப்பு அப்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காலம் ஓட, அனிதாவும் உடன் சென்றாள். அப்பா என்கிற உறவு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை உணரும் வயதுக்கு வந்த அனிதா, அந்த இழப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள்.
தன்னுடன் பழகும், படிக்கும் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தம்முடைய அப்பாவைப் பற்றிப் பேசும்போது, அவள் வருத்தமடைந்தாள்.
அப்பாவைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் மற்ற பிள்ளைகளுக்குச் சொல்ல எவ்வளவோ இருக்கும். ஆனால், அனிதாவுக்கோ, அவரைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு வாக்கியம்தான் இருந்தது. “என் சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார்” என்னும் வாக்கியத்தைத்தான் அவள் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது.
ஒரு சிலர் தன்னுடைய பெற்றோரின் கண்டிப்பை, அவர்களுடைய பேச்சை, விருப்பங்களைப் பற்றி உதாசீனமாகப் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அனிதாவின் மனம் மிகவும் கஷ்டப்படும். சக மாணவர்கள் பெற்றோரைப் பற்றி மரியாதை இல்லாமல் பேசும்போதும், குறை சொல்லும்போதும் அவள் வேதனை அடைவாள்.
ஒரு மனிதரோ, ஒரு பொருளோ, ஒரு வசதியோ, இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியும். இருக்கும்போது அதை எளிதாகவும் அலட்சியமாகவும் எடுத்துக்கொள்வதும் இழந்த பிறகு அழுது புலம்புவதும் சராசரி மனிதர்களின் போக்கு.
அனிதாவைப் போலத் தந்தையையோ, தாயையோ இழந்தால்தான் அவர்களுடைய அருமை தெரிய வேண்டும் என்பதில்லை. பெற்றோரின் அன்மையும் அவர்களுடைய நோக்கத்தையும் யாரோடும் ஒப்பிட முடியாத அவர்களுடைய அக்கறையையும் அவர்கள் இருக்கும்போதே உணரலாம். மதிக்கலாம். போற்றிக் கொண்டாடலாம்.
மாற்றுக்கருத்து என்பது வேறு, அலட்சியம் என்பது வேறு. நம்மில் பலர் பெற்றோரை மட்டுமல்ல, மேலும், பல உறவுகளிலும் அந்த உறவுகளின் அருமை தெரியாமல் கையாள்வதுண்டு. ஒரு மனிதர் / உறவினர் உயிருடன் இருக்கும்போதே அவருடைய அருமையை, மதிப்பை உணரும் பக்குவம் சிலருக்குத்தான் வாய்க்கிறது.
“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக” என்பது பைபிளில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ஐந்தாவது கட்டளை.