தமிழ் திரையுலகின் முன்னணி திரைப்பட வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸின் உரிமையாளரும், நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மாமன்னன்’. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் வைகைப்புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ‘இசை புயல்’ ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் இறுதி நாளன்று படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர்.
படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதால் விரைவில் பின்னணி பணிகள் தொடங்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘மாமன்னன்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.