ஆண், பெண் என இருபாலாருக்கும் பத்து வயது முதல் 25 வயதுக்குள் உதட்டின் உள் பகுதியில் நீர்க்கட்டிகள் ஏற்படும். தற்போது இதனை அகற்றுவதற்கான நவீன லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மில் பலருக்கும் உதட்டின் உள்பகுதியிலும், வாயின் உள் பகுதிகளிலும், நாக்கின் அடிப் பகுதியிலும் நீர்க்கட்டிகள் ஏற்படக்கூடும். Mucus Cyst எனப்படும் இத்தகைய கட்டிகள், உமிழ்நீர் சுரப்பியில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் வாய் சுகாதாரமின்மை காரணமாக உருவாகிறது. சிலருக்கு பற்களின் அமைப்பு சமச்சீரற்ற தன்மையில் இருப்பதால் வாயை மெல்லும்போது ஏற்படும் அசௌகரியத்தின் காரணமாகவும் இத்தகைய நீர்க்கட்டிகள் ஏற்படக்கூடும். மேலும் சிலருக்கு கீழ் உதடு மற்றும் மேல் உதடு வாயின் உள்பகுதி போன்ற இடங்களில் இத்தகைய நீர்க்கட்டி வரக்கூடும். இவை வலிகளை ஏற்படுவதில்லை.
ஆனால் இதனால் வாயால் மென்று உண்பதில் சங்கடங்களை ஏற்படுத்தும். இத்தகைய நீர்க்கட்டிகளுக்கு சிகிச்சை பெறவேண்டும். இல்லையெனில் அவை நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடிய அபாயமும் உண்டு. இதன்போது அத்தகைய நீர்கட்டியை பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப் படுத்துவார்கள்.
மிகச் சிலருக்கு இத்தகைய நீர்க்கட்டி காரணமே இல்லாமல் அடிக்கடி ஏற்படக்கூடும். அவர்கள் இதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் லேசர் சிகிச்சை அல்லது கிரையோதேரபி எனப்படும் சிகிச்சை மூலம் இதற்குரிய முழுமையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம். சிலருக்கு உதட்டை கடிக்கும் பழக்கம் இருக்கும். இதனை தவிர்த்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
டொக்டர் பிரசாந்த்
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]