உண்மையை மறைக்கவே அறிக்கைகள்: ஜெயலலிதாவின் தோழி கீதா பகீர் குற்றச்சாட்டு
தமிழக அரசால் தொடர்ந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்படுவது ஜெயலலிதாவின் கொலையை மறைக்கவே என அவரது தோழி கீதா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் திகதி இறந்த நாள் முதல் அவர் இயற்கையாக இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டார் எனவும் அவரது தோழி கீதா பரபரப்பு புகாரை தெரிவித்து வந்துள்ளார்.
அதுமட்டுமின்றி சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்றபோதும், இத்தனை நாள்கள் பன்னீர் செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி தமிழக அரசு டெல்லியில் அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து கீதா கூறுகையில், எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிட்டாலும் அதை தாம் ஏற்கப்போவதில்லை. ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதனால்தான் இறந்தார்.
3 மாதங்கள் மௌனமாக இருந்து விட்டு தற்போது அறிக்கை வெளியிடுவதற்கான அவசியம் என்ன? ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ அறிக்கை என்னிடம் உள்ளது.
நான் யாருக்காகவும் பயப்படமாட்டேன். எனது தோழி ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும் என குற்றச்சாட்டை சுமத்திய கீதா, தன்னுடைய தொலைபேசியும் ஒட்டுகேட்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்