உணவுப்பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலைகளை திங்கட்கிழமை (8) குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்புடன் உணவுப்பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலையையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேநீர் கோப்பை ஒன்று விலை தற்போது 40 முதல் 50 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தேநீர் கோப்பை ஒன்றின் விலையை மீண்டும் குறைப்பதற்கும், மேலும் உணவுப் பொதிகளின் விலைகளை 10 முதல் 20 இடைப்பட்ட வீதத்தினால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் திங்கட்கிழமை (8) முதல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட உள்ளமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கி உள்ளமையினால் சிற்றுண்டி உணவங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.
எனவே, அந்த நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் உணவுப்பொதியினதும் தேநீர் கோப்பையினதும் விலைகளை திங்கட்கிழமை முதல் குறைப்பதற்கு தீர்மானித்தோம்.
தற்போது கொழும்பில் சிற்றுண்டிச் சாலைகளில் விலைகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிவாரணத்தை ஏனைய நகர்புறங்களில் மற்றும் கிராமப்புறங்களில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கறுப்பு சந்தைகளை இல்லாது செய்ய வேண்டும். மேலும் ஜனாதிபதி தற்போது நுகர்வோர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.