அதிமுக-வின் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அங்கிருந்து வெளியேறும் மன நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த நிலையில், தனது அணியிலேயே நிலவும் கருத்து மோதல்கள், முட்டல்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.
இதிலிருந்து விடுபட தான் அவர் மூலிகை மருத்துவம் செய்து கொள்ள சென்று விட்டார் என அதிமுகவினர் கூறுகிறார்கள்.
பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து எதிர் அணியிலிருந்து பிரிந்து வந்தனர்.
அதன் பிறகு யாருமே, எடப்பாடி அணியிலிருந்து இங்கு வராததால் பன்னீர் செல்வத்தை அது கவலையடைய செய்துள்ளது.
இதனிடையில், ஓ.பி.எஸ் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்று பயணம், டெல்லி பயணம் போன்ற விடயங்கள் குறித்து அவர் அணியில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனிடம் ஏதும் சொல்லவில்லை என்றும் அதனால் அவர் ஓ.பி.எஸ் மீது கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நத்தம் விஸ்வநாதனுடன் ஓ.பி.எஸ் கலந்து பேசுவதில்லை.
பல நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதால் நத்தம் விஸ்வநாதன் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.
இதன் காரணமாக விரைவில் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணியில் நத்தம் விஸ்வநாதன் சேருவார் என கூறப்படுகிறது.
அப்படி இல்லையென்றால், அரசியலை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுக்கலாம் என்ற மன நிலையில் அவர் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.