உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது.
உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரகம் சேதம் அடைந்ததாகவோ, உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தூதரக வளாகத்தில் அதிரடிப்படை பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் ஈரான் நாடாளுமன்றத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென்று நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதுடன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.