உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி மற்றும் வைத்தியர்கள் மீது 70 க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, குறித்த தாக்குதல் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதென்பது நவீன யுத்தத்தில் மூலோபாயம் மற்றும் தந்திரங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் மார்ச் 8 ஆம் திகதி கார்கிவ் நகரின் தெற்கே உள்ள இசியம் என்ற இடத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மத்திய வைத்தியசாலையில் முதலாவது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இத்தாக்குதலில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட புதிய வரவேற்பு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதற்கு காணரம் ரஷ்யாவின் குண்டு தாக்குதல் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்த புகைப்படங்கள் நகரின் துணை மேயரால் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இரண்டாவது தாக்குதலின் போது வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை அறைகள் அழிக்கப்பட்டன.
தாக்குதல் நடைபெற்ற தினம் வைத்தியசாலை ஊழியர்கள் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூன்று புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திருந்தனர். அத்துடன் பிராந்தியத்தில் கடுமையான சண்டையில் காயமடைந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.
மார்ச் 9 ஆம் திகதி உக்ரேன் மரியுபோலில் அமைந்துள்ள மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்யப்படையினர் தாக்குல் நடத்தியதில் கர்ப்பிணியும் அவரது குழந்தையும் பலியாகினார்கள்.
இத்தாக்குதலில் கர்ப்பிணித்தாய் ஒருவரும் அவரது குழந்தையும் பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து தாக்குவதை மறுத்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் நடத்திய தாக்குதலில் இதுவரை சுகாதார சேவைகள் மீதான 72 தாக்குதல்களில் 71 பேர் உயிரிழந்துள்ளதோடு, 37 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இவ்வாறான சுகாதார சேவைகள் மீதான தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாங்கள் கவலை அடைகிறோம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் உக்ரேன் நாட்டின் பிரதிநிதி ஜார்னோ ஹபிச்ட் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]