கருங்கடலில் தரிந்து நின்ற ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரேன் அறிவித்துள்ள நிலையில், தாக்குதலில் சேதமடைந்த மாஸ்க்வா ஏவுகணை கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷ்ய இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் மீது ரஷ்யா 51 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரேன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரேன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரேன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.இந்நிலையில், கருங்கடலில் தரித்து நின்ற ரஷ்ய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரேன் அறிவித்துள்ளது.இது குறித்து உக்ரேன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவிக்கையில்,
கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்ய போர்க் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.இது உக்ரேனின் மகிமை. அந்த கப்பல் தற்போது பயங்கரமாக எரிகிறது. 510 குழு உறுப்பினர்கள் அதில் உள்ளனர். ஆனால், அவர்களால் உதவி பெற முடியுமா என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார்.
உக்ரேன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய போர் கப்பல் சேதம் அடைந்து தீப்பிடித்ததாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. ஒடேசாவிற்கு தெற்கே 60 முதல் 65 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தீப்பிழம்புடன் காணப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
சேதமடைந்த மாஸ்க்வா ஏவுகணை கப்பல் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷ்ய இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அதில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்ததாகவும், எனினும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]