ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் பலியானவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பலியானவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சங்ரில்லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத்தாக்குதலினால் பலியானவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் பலியானவர்களுக்காக 2.8 மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி ஹோட்டலில் பலியானவர்களுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் ஹோட்டலில் பலியானவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது