உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, அவற்றுடன் தொடர்புடைய 32 நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில், 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து அவற்றுடன் தொடர்புடைய 32 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கேகாலை , கண்டி ,குருணாகலை ,புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய நீதவான் நீதிமன்றங்களிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய 8 சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்காக , சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் , குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் போது புதிதாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டும் , குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் , பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.