நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னையா சண்முகநாதன்(சண் அங்கிள்) நேற்று காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 82 வயது. 12-02-1939இல் சங்குவேலியில் பிறந்த அவர் திருமணத்தின் பின்னர் கந்தரோடையில் வாழ்ந்து வந்தார்.
கலைச்செல்வி பண்ணைக்கூடாக எழுத்துலகுக்குள் பிரவேசித்த அவர் சிறுகதைகளையும், நகைச்சுவைப் புதினம் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவரது ஆக்கங்கள் வெள்ளரி வண்டி, இதோ ஒரு நாடகம், பெண்ணே நீ பெரியவள்தான், கொழும்புப்பெண், நினைக்க சிரிக்க சிந்திக்க, சிரிப்போம் சிந்திப்போம்,நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன.
வலிதெற்கு பிரதேச செயலகத்தின் ஞான ஏந்தல் விருது, கலாபூசணம் (2008) விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற அவர் உதயன் பத்திரிகையில் எழுதிய பத்தி எழுத்துக்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்துக்கான ஊடகத்துறை விருதையும் 2004 ஆம் ஆண்டு பெற்றவராவார்.
தினபதி பத்திரிகையின் மானிப்பாய் நிருபராகப் பணியாற்றிய அவர் உதயன் பத்திரிகை க்கும் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அவரது இறுதி நிகழ்வுகள் 16 – 12-2021 வியாழக்கிழமை முற்பகல் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.